Saturday 17 March 2012

03. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரங்கள்

விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

விளக்கம்:
அறிவு விளக்கை ஏற்றுங்கள். ஏற்றிப் பரஞான வெளியாக இருக்கின்ற பரம்பொருளை உணர்ந்தறியுங்கள். சோதிச் சுடரொளி விளக்காக இருக்கின்ற பரம்பொருள், திருமுன்பு நிற்கையில் வேதனை, துன்பங்கள் விலகிப்போகும். விளக்கை அதாவது ஒளியை, விளங்கச் செய்யும், ஒளி உடையவர்கள்; அவர்களே விளக்கில் ஒளிரும் சுடருக்கு விளக்கம் ஆனவர்கள். ஒளி ஒளி தரும் இவர்களே உயர்ந்த தவஞான சித்தர்கள். (திருமூலரின் திருமந்திரம் – பத்தாம் திருமுறை.)

விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

விளக்கம்:
இல்லத்தில் ஏற்றப்படும் ஒளி விளக்கைப் போன்று இடையூறுகள் யாவற்றையும் நீக்கி ஒளியை உண்டாக்கும் எழில் உடையது நமசிவாய எனும் திருவைந்தெழுத்து. சொல்லுதற்கு உரிய புகழ் மேவும் அகவிளக்காக விளங்கி மெய்ஞ் ஞானத்தை நல்கிப் பெருஞ் சுடராய், அறிவின் திரட்சியாய் நின்று அஞ்ஞானத்தை விலகச் செய்யும் இத்திருவைந்தெழுத்து, பலருடைய உள்ளங்களிலும் பரவிச்சென்று செழுமையை நல்கிச் சிறப்புத் தரும். பலரும் நேரில் கண்டு மகிழுமாறு செய்யும்.இம்மந்திரம் நன்மை புரியும் அகவிளக்காகும். இதனால் மன்னுயிர்களைப் பற்றிய இருள், இருவினை, மாயை (வடமொழியில் ஆணவம், கன்மம், மாயை) ஆகிய மும்மலங்களையும், போக்கும் பேரருள் ஒளியாக நமசிவாய என்னும் நல்ல நாமம் நன்மை புரியும்.
(திருநாவுக்கரசர் திருப்பதிகம்:நான்காம் திருமுறை)

No comments:

Post a Comment