Saturday 17 March 2012

03. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரங்கள்

விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

விளக்கம்:
அறிவு விளக்கை ஏற்றுங்கள். ஏற்றிப் பரஞான வெளியாக இருக்கின்ற பரம்பொருளை உணர்ந்தறியுங்கள். சோதிச் சுடரொளி விளக்காக இருக்கின்ற பரம்பொருள், திருமுன்பு நிற்கையில் வேதனை, துன்பங்கள் விலகிப்போகும். விளக்கை அதாவது ஒளியை, விளங்கச் செய்யும், ஒளி உடையவர்கள்; அவர்களே விளக்கில் ஒளிரும் சுடருக்கு விளக்கம் ஆனவர்கள். ஒளி ஒளி தரும் இவர்களே உயர்ந்த தவஞான சித்தர்கள். (திருமூலரின் திருமந்திரம் – பத்தாம் திருமுறை.)

விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

விளக்கம்:
இல்லத்தில் ஏற்றப்படும் ஒளி விளக்கைப் போன்று இடையூறுகள் யாவற்றையும் நீக்கி ஒளியை உண்டாக்கும் எழில் உடையது நமசிவாய எனும் திருவைந்தெழுத்து. சொல்லுதற்கு உரிய புகழ் மேவும் அகவிளக்காக விளங்கி மெய்ஞ் ஞானத்தை நல்கிப் பெருஞ் சுடராய், அறிவின் திரட்சியாய் நின்று அஞ்ஞானத்தை விலகச் செய்யும் இத்திருவைந்தெழுத்து, பலருடைய உள்ளங்களிலும் பரவிச்சென்று செழுமையை நல்கிச் சிறப்புத் தரும். பலரும் நேரில் கண்டு மகிழுமாறு செய்யும்.இம்மந்திரம் நன்மை புரியும் அகவிளக்காகும். இதனால் மன்னுயிர்களைப் பற்றிய இருள், இருவினை, மாயை (வடமொழியில் ஆணவம், கன்மம், மாயை) ஆகிய மும்மலங்களையும், போக்கும் பேரருள் ஒளியாக நமசிவாய என்னும் நல்ல நாமம் நன்மை புரியும்.
(திருநாவுக்கரசர் திருப்பதிகம்:நான்காம் திருமுறை)

Monday 12 March 2012

01. மந்திரத் தமிழ்


மந்திரம் என்பது தூய தமிழ்ச் சொல். இதிலிருந்து ‘மந்த்ரம்’ என்ற வடமொழிச்சொல் எடுத்தாளப் பட்டது. இவை இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தோற்றம் அளித்தாலும் இரண்டின் பொருளும் வெவ்வேறு. எதிரெதிரானது.

‘மந்த்ரம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு நினைப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். தொடர்ந்து உச்சரித்து வந்தால் குறிப்பிட்ட உச்சாடன எண்ணிக்கையில் நினைப்பவனை ‘மந்த்ரம்’ காப்பாற்றும். இங்கே ‘மந்த்ரம்’ எஜமானன். சொல்லுபவன் அடிமை. தவறாக உச்சரித்து விட்டால் ‘மந்த்ரம்’ ஒரு எஜமானனைப் போல தண்டித்து விடும்.

நாரதர் செய்த வேள்வியில் செபிக்கப்பட்ட தவறான உச்சரிப்பால் ஆற்றல் மிகுந்த பிரமாண்டமான ஆடு தோன்றி அவர்களை ஓட ஓட விரட்டியது என்பார்கள். பிறகு முருகன் அதை அடக்கி வாகனமாக்கிக் கொண்டான் என கந்த புராணம் கூறும். எனவே வடமொழி ‘மந்த்ரத்தில்’ நாம் கவனிக்க வேண்டியவை இரண்டு.

1.   ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்ற எண்ணிக்கையில் செபித்தால் தான் அது வேலை செய்யும்.

2.   தவறாக உச்சரித்தால் சொல்கிறவனை அது தண்டித்து விடுவதால் வடமொழி ‘ம்ந்த்ரம்’ எஜமானன், சொல்லுபவன் அடிமை.

தமிழில் கூறப்படும் மந்திரம் இதற்கு நேர் எதிரானது. இங்கே சொல்லுபவன் எஜமானன். மந்திரம் அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு செயலாற்றும் அடிமை. சொல்லுபவன் எஜமானன் ஆனதால் அவன் அதை பல முறை உருப்போட்டு செபிக்க வேண்டுவதில்லை. அவனது சொல் ஒருமுறை சொல்லப்பட்டால் போதும். மந்திரம் உடனே செயலாற்றும். இதற்கு பல உதாரணங்கள் எடுத்துக்கூறலாம்.
எனினும் சுந்தரர் முதலை உண்ட பாலனை எழுப்பியதையே சிறந்த சான்றாகக் கூறலாம். முதலை உண்ட பாலனை எழுப்பும் போது சுந்தரர் ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு லட்சம் வரை எந்த மந்திரத்தையும் முணு முணுக்கவில்லை. அதன்பிறகு உருவேறிய அதனைக்கூறி முதலை உண்ட பாலனை எழுப்பவில்லை.

“ கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே “ 

என்று ஓரடி பாடியவுடன் பிள்ளை ஓடி வந்தான். அந்த அடியில் சுந்தரர் காலனுக்கு அவிநாசியப்பர் (சிவன்) வழியாக (Through proper channel) ஆணையிடுகிறார். அவிநாசியப்பர் மேலாண்மையில் பணியாற்றும் சிற்றதிகாரியான காலன் பிள்ளையை மீட்டு ஒப்படைக்கிறான்.
இது தமிழ் மந்திரத்திற்கே உரிய பேராற்றல். இதனை அப்படியே மந்திரத்திற்கு இலக்கணமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”

அப்படியானால் நாம் இப்போது “ கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே “ என்று பாடும் போது ஒரு பிள்ளை ஓடி வரவில்லையே என்று சந்தேகம் வரலாம்.

நாம் கூறும் போது வெறும் வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்கிறோம். அந்தச் சொற்களில் ஆற்றல் இல்லை. சுந்தரர் சொல்லும்போது அந்தச் சொற்களில் பேராற்றலை மறைத்து வைத்தார். எனவே அது மறைமொழி எனப்பட்டது. நாம் கூறும்போது சொற்களில் அவற்றிற்குரிய ஆற்றல் இல்லாமையால் அவை குறைமொழி.

எனவே தமிழ் மந்திரம் உயர்வானது என்பதை உணர்கிறோம். அதன் ஆற்றல் சொற்களில் புதைந்து கிடக்கும் என்பதையும் உணர்கிறோம்.

(நன்றி: திருமுருகாற்றுப்படை : சகுந்தலை நிலையம் வெளியிட்டது)

Sunday 11 March 2012

02. தொழில் விருத்தியடைய மற்றும் பொருள் சேர, சொல்ல வேண்டிய மந்திரங்கள் !


திருச்சிற்றம்பலம்!

வாசி தீரவே, காசு நல்குவீர் !
மாசில் மிழலையீர் ! ஏசல் இல்லையே. 
இறைவர் ஆயினீர் ! மறைகொள் மிழலையீர் !
கறை கொள் காசினை முறைமை நல்குமே !
செய்யமேனியீர் ! மெய் கொள் மிழலையீர் !
பை கொள் அரவினீர் ! உய்ய, நல்குமே !
நீறு பூசினீர் ! ஏறது ஏறினீர் !
கூறு மிழலையீர் ! பேறும் அருளுமே !
காமன் வேவ, ஓர் தூம கண்ணினீர் !
நாம மிழலையீர் ! சேமம் நல்குமே !
பிணி கொள் சடையினீர் ! மணி கொள் மிடற்றினீர் !
அணி கொள் மிழலையீர் ! பணிகொண்டு அருளுமே
மங்கை பங்கினீர் ! துங்க மிழலையீர் !
கங்கை முடியினீர் ! சங்கை தவிர்மினே !
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர் !
பரக்கும் மிழலையீர் ! கரக்கை தவிர்மினே !
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர் !
இயலும் மிழலையீர் ! பயனும் அருளுமே !
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார் ;
வெறி கொள் மிழலையீர் ! பிரிவது அரியதே,
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் – தாழும் மொழிகளே

திருத்தலங்கள் தோறும் யாத்திரையை மேற்கொண்ட திருஞான சம்பந்தர், திருவீழிமிழலையில் தங்கி இருந்து பெருமானை வணங்கிப் பல பதிகங்கள் பல அருளிச் செய்யலானார். அவரோடு திருநாவுக்கரசரும் உடன் இருந்து இறைவனை வணங்கி மகிழ்ந்தார். அக்காலத்தில் வான் மழை பொய்த்து, நிலம் வறண்டு, விளைச்சலும் குறைவுற்று வறுமையுண்டாயிற்று. மக்கள் பசித் துன்பத்தால் வருந்தினார்கள்.
சம்பந்தர் கனவில் ஈசன் தோன்றி, நிலவுலகத்தின் இயல்பால் வறுமை வந்தடைந்தாலும், தீமை பயக்கும் பசி நோய் சம்பந்தர் மற்றும் நாவுக்கரசரை வந்து அடையாது என்றும் ஆயினும் அவர்களைச் சார்ந்தோர் பசி நோயால் வருந்தாதவாறு பலிபீடத்தின் மீது தினமும் பொற்காசு ஒன்றினை அளிப்பதாகவும், அதன் வாயிலாக இத்துன்பத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என அருளினார்.
அப்பொற்காசைக் கொண்டு தடையின்றி திருவமுது தினமும் நடைபெற்றது. ஆனால் பொற்காசு மாற்றுக்குறைந்த தன்மையில் இருந்ததால் திருவமுது படைப்பது தினமும் தாமதமானது.
மாசு நீங்கிய பொற்காசு அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டதே இப்பதிகம்.
   
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!