Sunday 22 April 2012

04. குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்


வாளி நிறைய நீர் நிறைத்து அதில் ‘ஓம்’ என்று எழுதி உள்ளங்கையால் மூடி (பதாகை முத்திரை) ஏழு முறை ஓங்காரத்தை ஓதுக. குவளையில் நீரை முகந்து அதனை உள்ளங்கையால் மூடி வரும் பாடலை ஓதுக. 


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.


விளக்கம்:
காதில் பொருந்திய தோடு ஆடும்படியாகவும், உடம்பில் அணியப்பட்ட பொன்னாலாகிய அணிகள் ஆடவும், பூமாலை கூந்தலில் இருந்து அசையவும், பூமாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ந்த நீரில் மூழ்கி, தில்லைச் சிற்றம்பலத்தை புகழ்ந்து பாடி,

வேதங்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன. அந்த வேதப்பொருளாகிய சிவபெருமானைப்பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணமும் பாடி, ஒளியுருவனாகிய சிவபெருமானின் ஆற்றலைப்பாடி, இறைவன் தலையில் அணிந்துள்ள கொன்றை மாலையையும் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையையும் பாடி,

பக்குவ முறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி சிறப்பாக வளர்த்துக் காத்த வளையல் நிறைந்த கையுடைய அம்மையின் திருவடிச் சிறப்பினையும் பாடி நீராடுவோமாக.         



(மாணிக்கவாசகர் - எட்டாம் திருமுறை திருவாசகம் – திருவெம்பாவை )