Monday 12 March 2012

01. மந்திரத் தமிழ்


மந்திரம் என்பது தூய தமிழ்ச் சொல். இதிலிருந்து ‘மந்த்ரம்’ என்ற வடமொழிச்சொல் எடுத்தாளப் பட்டது. இவை இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தோற்றம் அளித்தாலும் இரண்டின் பொருளும் வெவ்வேறு. எதிரெதிரானது.

‘மந்த்ரம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு நினைப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். தொடர்ந்து உச்சரித்து வந்தால் குறிப்பிட்ட உச்சாடன எண்ணிக்கையில் நினைப்பவனை ‘மந்த்ரம்’ காப்பாற்றும். இங்கே ‘மந்த்ரம்’ எஜமானன். சொல்லுபவன் அடிமை. தவறாக உச்சரித்து விட்டால் ‘மந்த்ரம்’ ஒரு எஜமானனைப் போல தண்டித்து விடும்.

நாரதர் செய்த வேள்வியில் செபிக்கப்பட்ட தவறான உச்சரிப்பால் ஆற்றல் மிகுந்த பிரமாண்டமான ஆடு தோன்றி அவர்களை ஓட ஓட விரட்டியது என்பார்கள். பிறகு முருகன் அதை அடக்கி வாகனமாக்கிக் கொண்டான் என கந்த புராணம் கூறும். எனவே வடமொழி ‘மந்த்ரத்தில்’ நாம் கவனிக்க வேண்டியவை இரண்டு.

1.   ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்ற எண்ணிக்கையில் செபித்தால் தான் அது வேலை செய்யும்.

2.   தவறாக உச்சரித்தால் சொல்கிறவனை அது தண்டித்து விடுவதால் வடமொழி ‘ம்ந்த்ரம்’ எஜமானன், சொல்லுபவன் அடிமை.

தமிழில் கூறப்படும் மந்திரம் இதற்கு நேர் எதிரானது. இங்கே சொல்லுபவன் எஜமானன். மந்திரம் அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு செயலாற்றும் அடிமை. சொல்லுபவன் எஜமானன் ஆனதால் அவன் அதை பல முறை உருப்போட்டு செபிக்க வேண்டுவதில்லை. அவனது சொல் ஒருமுறை சொல்லப்பட்டால் போதும். மந்திரம் உடனே செயலாற்றும். இதற்கு பல உதாரணங்கள் எடுத்துக்கூறலாம்.
எனினும் சுந்தரர் முதலை உண்ட பாலனை எழுப்பியதையே சிறந்த சான்றாகக் கூறலாம். முதலை உண்ட பாலனை எழுப்பும் போது சுந்தரர் ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு லட்சம் வரை எந்த மந்திரத்தையும் முணு முணுக்கவில்லை. அதன்பிறகு உருவேறிய அதனைக்கூறி முதலை உண்ட பாலனை எழுப்பவில்லை.

“ கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே “ 

என்று ஓரடி பாடியவுடன் பிள்ளை ஓடி வந்தான். அந்த அடியில் சுந்தரர் காலனுக்கு அவிநாசியப்பர் (சிவன்) வழியாக (Through proper channel) ஆணையிடுகிறார். அவிநாசியப்பர் மேலாண்மையில் பணியாற்றும் சிற்றதிகாரியான காலன் பிள்ளையை மீட்டு ஒப்படைக்கிறான்.
இது தமிழ் மந்திரத்திற்கே உரிய பேராற்றல். இதனை அப்படியே மந்திரத்திற்கு இலக்கணமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”

அப்படியானால் நாம் இப்போது “ கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே “ என்று பாடும் போது ஒரு பிள்ளை ஓடி வரவில்லையே என்று சந்தேகம் வரலாம்.

நாம் கூறும் போது வெறும் வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்கிறோம். அந்தச் சொற்களில் ஆற்றல் இல்லை. சுந்தரர் சொல்லும்போது அந்தச் சொற்களில் பேராற்றலை மறைத்து வைத்தார். எனவே அது மறைமொழி எனப்பட்டது. நாம் கூறும்போது சொற்களில் அவற்றிற்குரிய ஆற்றல் இல்லாமையால் அவை குறைமொழி.

எனவே தமிழ் மந்திரம் உயர்வானது என்பதை உணர்கிறோம். அதன் ஆற்றல் சொற்களில் புதைந்து கிடக்கும் என்பதையும் உணர்கிறோம்.

(நன்றி: திருமுருகாற்றுப்படை : சகுந்தலை நிலையம் வெளியிட்டது)

No comments:

Post a Comment